வீடு புகுந்து சூப்பிரண்டு அலுவலக ஊழியருக்கு அரிவாள் வெட்டு

கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து சூப்பிரண்டு அலுவலக ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-29 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து சூப்பிரண்டு அலுவலக ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

சூப்பிரண்டு அலுவலக ஊழியர்

கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். அரவிந்த் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கு தொடர்பாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரிவாளால் வெட்டினர்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அரவிந்த் தனது வீட்டில் இருந்தார். அப்போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தின் வீட்டுக்குள் நுழைந்தது. பின்னர், அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அரவிந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அரவிந்த் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்விரோதம்

இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், அரவிந்துக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடன் பிரச்சனை இருந்து வந்ததும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்