அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருட்டு

கடலூரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-16 17:30 GMT

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது. நேற்று கோவிலில் பூஜை முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை கோவிலை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த ஒரு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் மற்றொரு உண்டியலை காணவில்லை. இதுபற்றி அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் புதுநகர் போலீசார் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் ஒரு உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி உள்ளனர். பின்னர் மற்றொரு உண்டியலை பெயர்த்தெடுத்து சென்றது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த உண்டியல்களை திறந்து காணிக்கை பணம் எண்ணப்படவில்லை. இதனால் உண்டியல்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

உண்டியல்கள் உடைப்பு

இதேபோல் புதுப்பாளையத்தில் உள்ள கங்கை அம்மன் கோவில் மற்றும் மஞ்சக்குப்பம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வினைதீர்த்த விநாயகர் கோவில் ஆகிய 2 கோவில்களின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த கோவில்களில் இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டிருந்தது. இதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை.

இதுபற்றி அறிந்து வந்த புதுநகர் போலீசார், உடைக்கப்பட்டிருந்த உண்டியல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கோவில் உண்டியல்களை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. ஆனால் இந்த 2 கோவில்களின் உண்டியல்களிலும் எவ்வளவு பணம் இருந்தது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

பரபரப்பு

தொடர்ந்து இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் 3 கோவில்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் திருடினார்களா?, அல்லது வெவ்வேறு கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளார்களா? எனவும் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து 3 கோவில்களில் மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்