வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Update: 2023-08-05 17:54 GMT

அணைக்கட்டு

வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா ேநற்று கொடிேயற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளி பெருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். அதில் பலர் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி இரவு உற்சவர் எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'காமதேனு' வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து தோன்றிய அற்புதமான பொருட்களில் ஒன்று காமதேனு. இது, விரும்பிய அனைத்தையும் அளிக்க வல்லது. தன்னை வழிபடும் பக்தர்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன், என்பதை உணர்த்தவே எல்லையம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து தினமும் காலை கேடய உற்சவம் நடக்கிறது.

11-ந்தேதி தேர்த்திருவிழா

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சிம்ம வாகன வீதிஉலா, நாளை (திங்கட்கிழமை) இரவு பூத வாகன வீதிஉலா, 8-ந்தேதி இரவு நாக (சேஷ) வாகன வீதிஉலா, 9-ந்தேதி இரவு அன்ன (ஹம்ச) வாகன வீதிஉலா, 10-ந்தேதி இரவு யானை (கஜ) வாகன வீதிஉலா, 11-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, 12-ந்தேதி இரவு குதிரை (அஸ்வ) வாகன வீதிஉலா நடக்கிறது. 13-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 14-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

மேலும் ஆடி 5-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 17, 18, 19-ந்தேதிகளில் தெப்போற்சவம், 25-ந்தேதி மாலை லட்ச தீபபெருவிழா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி தலைமையில் நடந்து வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்