கூடலூரில் விவசாயி வீட்டில் பூத்த பிரம்மகமல பூக்கள்
கூடலூரில் விவசாயி வீட்டில் பிரம்மகமல பூக்கள் பூத்துக்குலுங்கின.
கூடலூர் ஞானிய கோனார் தெருவை சேர்ந்தவர் வேலிகாஞ்சி கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. இவர் தனது வீட்டில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்மகமல பூ செடிகளை 2 பூந்தொட்டிகளில் வளர்த்து வருகிறார்.
'இரவின் இளவரசி' என்று அழைக்கப்படும் பிரம்ம கமலம் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். மறுநாள் காலையில் வாடி விடும். மருத்துவ நன்மைகளை கொண்ட இந்த பூக்கள், கல்லீரல் பாதிப்பு, காய்ச்சல், நரம்பு கோளாறு, மாதவிடாய், தோல் உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்யவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
இந்தநிலையில் வேலிகாஞ்சி கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு செடிகளில் பிரம்மகமல பூக்கள் பூத்தன. ஒரு தொட்டியில் 5 பூக்களும், மற்றொன்றில் 3 பூக்களும் பூத்தன. இந்த பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.