இளம்பெண் தற்கொலை வழக்கில் காதலன் திடீர் கைது

இளம்பெண் தற்கொலை வழக்கில் காதலனை போலீசார் திடீரென்று கைது செய்தனர்.

Update: 2022-10-31 21:37 GMT

மேச்சேரி

ஜலகண்டாபுரம் அருகே செலவடை மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுடைய மகள் நந்தினி (வயது 23). ராஜேந்திரன் இறந்துவிட்டதால் தனது தாயார் லட்சுமியுடன் நந்தினி வசித்து வந்தார். இந்த நிலையில் நந்தினி அரியாம்பட்டி பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளியான வசந்த் (26) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக வசந்த், நந்தினியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் நந்தினி திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதாகவும் அதற்கு வசந்த் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நந்தினி கடந்த வாரம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நந்தனியின் தாயார் லட்சுமி ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது மகள் நந்தினியும், வசந்தும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்து நந்தினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே எனது மகளின் இறப்பிற்கு வசந்த் தான் காரணம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் நந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக வசந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்