காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்பு

கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-09-11 18:37 GMT

சிறுவன் மூழ்கினார்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மேட்டுப்பட்டி உள்பட 5 கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பங்காளிகள் திருவிழா நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை தீர்த்தக்குடம் எடுப்பதற்காக 5 ஊரைச் சேர்ந்தவர்கள் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் குழந்தைவேலு (வயது 17) ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து குளித்தலை போலீசார், முசிறி தீயணைப்பு வீரர்கள், குளித்தலை மீனவர்கள் அந்த சிறுவனை இரவு வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருவிழா நிறுத்தப்பட்டது.

பிணமாக மீட்பு

இதையடுத்து நேற்று காலை 2-வது நாளாக குழந்தைவேலுவை தேடும் பணி காவிரி ஆற்றில் நடந்தது. அப்போது, தண்ணீர்பள்ளி காவிரி ஆற்று பகுதியில் குழந்தைவேலுவின் உடல் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. பின்னர் குழந்தைவேலுவின் உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து குளித்தலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை வேலுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்