கெங்கவல்லி அருகே பிறந்த 4 நாட்களில் ஆண் குழந்தை பலி-ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

கெங்கவல்லி அருகே பிறந்த 4 நாட்களில் ஆண் குழந்தை பலியானதால் ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-11-17 22:08 GMT

கெங்கவல்லி:

குழந்தை பலி

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டியை சேர்ந்தவர் நவநீதன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரிதா (22). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சரிதா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 14-ந் தேதி சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தாயும், சேயும் கடந்த 4 நாட்களாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே நேற்று காலை திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது.

முற்றுகை

இது குறித்து டாக்டர்களிடம் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் கேட்டதற்கு, குழந்தை மூச்சு திணறி இறந்தது என கூறினார்கள். ஆனால் பெற்றோர், உறவினர்கள் நீங்கள் சிகிச்சை அளிக்க தாமதமானதால் தான் குழந்தை இறந்தது என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவலின் பேரில் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிறந்த 4 நாட்களில் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்