பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பாதுகாப்பு பெட்டகம்-கலெக்டர் அறிமுகம் செய்தார்
பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பாதுகாப்பு பெட்டகத்தை கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார்.
கிருஷ்ணகிரி:
குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி, உதவி தொகைகள், சாலை வசதி, மின்சார வசதி உள்பட பலவேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 348 மனுக்களை கொடுத்தனர். அதை பெற்று கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் பணிபுரிய கூடிய இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பாதுகாப்பு பெட்டகத்தை கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-
புகார்களை தெரிவிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு பெட்டகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தை பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பெட்டகத்தில் பெண்கள் தங்களின் புகார்களை எழுத்து மூலமாக அளிக்கலாம்.
இந்த பெட்டகங்களை கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களில் வைக்க வேண்டும். நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புகார் குழுவின் உறுப்பினர், குழுவில் இடம் பெற்றுள்ள வெளி நபரான ஒரு தன்னார்வலர் முன்னிலையில் பெட்டகம் திறக்கப்பட வேண்டும்.
பதிவேடு
இதில் வரும் புகார்களுக்கு பதிவேடு பராமரித்து அது குறித்த விவரத்தை காலமுறை அறிக்கையாக மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளூர் புகார் குழுவிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, உதவி ஆணையர் (ஆயம்) பாலகுரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.