மகள் பிரசவத்துக்கு கடனாக வாங்கிய ரூ.40 ஆயிரத்தை தொலைத்த மளிகை கடைக்காரர்; பணத்தை எடுத்த பெண், போலீசில் ஒப்படைத்தார்

மகள் பிரசவத்துக்கு கடனாக வாங்கிய ரூ.40 ஆயிரத்தை மளிகை கடைக்காரர் ஒருவர் பஸ்நிலையத்தில் தொலைத்தார். அதை எடுத்த பெண் பத்திரமாக போலீசில் ஒப்படைத்தார்.

Update: 2022-10-27 21:02 GMT

சத்தியமங்கலம்

மகள் பிரசவத்துக்கு கடனாக வாங்கிய ரூ.40 ஆயிரத்தை மளிகை கடைக்காரர் ஒருவர் பஸ்நிலையத்தில் தொலைத்தார். அதை எடுத்த பெண் பத்திரமாக போலீசில் ஒப்படைத்தார்.

கீழே கிடந்த பணம்

பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தன்னுடைய கணவருடன் வெளியூர் செல்வதற்காக சத்தியமங்கலம் பஸ்நிலையத்தில் நேற்று காலை 9.20 மணி அளவில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது கீழே 500 ரூபாய் நோட்டு கட்டு கிடந்தது. அதை ராஜேஸ்வரி எடுத்து பார்த்தார். அவரின் அருகே தொட்டம்பாளையத்தை சேர்ந்த கோகுல் என்ற வாலிபரும் அதை கவனித்தார்.

பணத்தை எடுத்த ராஜேஸ்வரி இது யாருடைய பணமோ தெரியவில்லை. கீழே போட்டுவிட்டார்கள் என்று கோகுலிடம் கூறினார். அதன்பின்னர் ராஜேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் கோகுல் 3 பேரும் சேர்ந்து பணத்தை சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தார்கள்.

மகள் பிரசவத்துக்கு

பணத்தை பெற்றுக்கொண்ட போலீசார் பஸ்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்கள். ஆனால் அதில் பணத்தை தொலைத்தது யார?என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இதுபற்றிய விவரத்தை வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தியாக வெளியிட்டு, முறையான அடையாளம் காட்டி பணத்தை பெற்றுச்செல்லலாம் என்று தெரிவித்து இருந்தார்கள்.

இந்தநிலையில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் மளிகை கடை நடத்தி வரும் தூத்துக்குடி மாவட்டம் இளையன்வினையை சேர்ந்த ஜோஸ்வா என்பவர் பதற்றத்துடன் சத்தி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் போலீசாரிடம், பஸ்நிலையத்தில் நான்தான் ரூ.40 ஆயிரத்தை தொலைத்துவிட்டேன். என்னுடைய மகளை பிரசவத்துக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அதற்கு தேவைப்பட்டதால் என்னுடைய நண்பர் குணசிங் என்பவரிடம் ரூ.40 ஆயிரத்தை கடனாக வாங்கி வந்தேன் என்றார்.

பாராட்டு

இதையடுத்து போலீசார் குணசிங்கிடம் சென்று விசாரித்தார்கள். அப்போது அவர் ஜோஸ்வாவுக்கு ரூ.40 ஆயிரம் கடன் கொடுத்தது உண்மை என்று தெரிந்தது. மேலும் குணசிங் அவருடைய கடையில் வைத்து பணத்தை எண்ணிக்கொடுக்கும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து போலீசார் ஜோஸ்வாவிடம் பணத்தை ஒப்படைத்தார்கள். அவர் நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். மேலும் பஸ்நிலையத்தில் கண்டெடுத்த பணத்தை தாங்களே வைத்துக்கொள்ளாமல் போலீஸ்நிலையத்தில் அதை நேர்மையாக ஒப்படைத்த ராஜேஸ்வரிக்கும், அதற்கு உதவி புரிந்த கோகுலுக்கும் சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்