பொற்கொடி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.10 லட்சம்

வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது.

Update: 2023-05-17 17:24 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் உள்ள பொற்கொடி அம்மன் கோவில் ஏரித்திருவிழா கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடந்தது. 10-ந் தேதி ஏரியில் நடந்த திருவிழாவில் புஷ்பரதத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட உண்டியல்களில் காணிக்கை செலுத்தினர்.

பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்தியா, ஆய்வாளர் சுரேஷ்குமார், கோவில் செயல்அலுவலர் அண்ணாமலை, மேலாளர் ஆறுமுகம், விரிஞ்சிபுரம் கோவில் மேலாளர் ஆனந்தன், வல்லண்டராமம், அண்ணாச்சிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்டியல்காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.9 லட்சத்து 96 ஆயிரத்து 179 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 3 கிராம் தங்கம், 64 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. இத்தகவலை கோவில் செயல் அலுவலர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்