பூம்பூம் மாட்டுக்காரர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

சாதி சான்றிதழ் வழங்கக்கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். இதனால் ஆத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-19 18:57 GMT

ஆத்தூர்

பூம்பூம் மாட்டுக்காரர்கள்

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஏரிக்கரை பகுதியில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் சுமார் 36 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். அவர்கள் பெருமாள் கோவிலுக்கு வேண்டுதலுக்காக நேர்ந்துவிடும் மாடுகளை வைத்து காலகாலமாக ஊர் ஊராக சென்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களது குழந்தைகள் தலைவாசல் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

ஊர் ஊராக சுற்றி திரிவதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு இலவச வீடு மற்றும் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனக்கோரி மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாச்சியர், தாலுகா அலுவலகங்களில் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர். அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் உதவி கலெக்டர் ரமேஷ், தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்