சிவகங்கையில் புத்தக திருவிழா

சிவகங்கை மாவட்டத்தில் 11 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-27 18:46 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் 11 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

புத்தக திருவிழா

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் பாபாசி அமைப்பு இணைந்து சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா மற்றும் இலக்கிய திருவிழாவை நடத்துகின்றனர். இதில் கீழடி அகழாய்வு குறித்த கண்காட்சி, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி, அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சி, அறிவியல் கோளரங்கம், போக்குவரத்து விதிமுறைகளை கண்காட்சியாக கொண்ட சிறப்பு பஸ் மற்றும் புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க விழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தக திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.11 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது. அதற்கு அடுத்து மாவட்ட அளவில் தமிழகத்தில் சிவகங்கையில் தான் ரூ.3½ கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது.

இந்த ஆண்டு இந்த கண்காட்சியில் அரங்கம் அமைக்க 146 புத்தக நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த், தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வைரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்