கிணற்றுக்குள் எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு
பந்தலூர் அருகே கிணற்றுக்குள் எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே கரியசோலை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொது குடிநீர் கிணற்றில், தண்ணீர் சுகாதார மற்ற முறையில் இருந்ததால், நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் தூர்வாரும் பணி நடைப்பெற்றது. அப்போது கிணற்றில் எலும்பு கூடுகள் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த நெலாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், கால்நடை டாக்டர் லாவன்யா, தேவா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். மேலும் எலும்புகளை ஊட்டி தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில் அந்த எலும்புகள் மனித எலும்புகள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தொடர்ந்து அது வனவிலங்குகள் எலும்பா என்பதை கண்டறிய, சென்னை வண்டலூர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.