காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

கடலூர் அருகே காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-26 18:45 GMT

நெல்லிக்குப்பம்

மருத்துவமனை ஊழியர்கள்

கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கத்தை அடுத்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவர் தனது மனைவியுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார்.

நேற்று முன்தினம் இரவு முருகானந்தம் தனது வீட்டின் கதவை பூட்டாமல், வாசலில் திரைச்சீலையை மட்டும் போட்டுவிட்டு குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையே நள்ளிரவில் அப்பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்ட நேரத்தில் முருகானந்தம் வீட்டின் வெளியே அடுத்தடுத்து பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்ட அதிர்ச்சியில் எழுந்த முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்த போது, வீட்டின் முன்பு சணல், உடைந்த கண்ணாடி துண்டுகள் மற்றும் சிறிய ஆணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

மேலும் வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த திரைச்சீலையும் கருகி இருந்தது. அப்போதுதான் மர்மநபர்கள் யாரோ?, நாட்டு வெடிகுண்டுகள் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகானந்தம், தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியவர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார்.

இந்த தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், புதுச்சேரி மாநிலம் கரையாம்புதூர் பனையடிகுப்பத்தை சேர்ந்த சுனில் (21), சிங்கிரிகுடி புதுக்கடையை சேர்ந்த ராஜ்குமார்(22) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

காதலிக்குமாறு வற்புறுத்தல்

தொடர்ந்து நடத்திய விசாரணையில், முருகானந்தத்தின் 2-வது மகள், பள்ளிக்கூடம் சென்று வந்தபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற சுனில், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார்.

உடனே முருகானந்தம், சுனிலை அழைத்து எச்சரித்து அனுப்பினார். இதில் ஆத்திரமடைந்த சுனில், தனது நண்பர்கள் ராஜ்குமார் மற்றும் 16 வயது சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் முருகானந்தம் வீட்டிற்கு சென்று, இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசி விட்டு தப்பியது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில், ராஜ்குமார் மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

முன்னதாக போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதில் தவறி கீழே விழுந்ததில் சுனிலின் வலது கால் முறிந்தது குறிப்பிடத்தக்கது. காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்