திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Update: 2022-08-09 23:08 GMT

வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 9 மணியளவில் ஒரு மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 'நான் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளேன்' என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார். இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியமூர்த்தி, அருளானந்தம் மற்றும் போலீசார் மோப்ப நாய் டெய்சியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காவலாளி கைது

இதற்கிடையே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த எண்ணில் பேசியவர் திருச்சி பஞ்சப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி(வயது 43) என்பதும், அவர் காவலாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், பழனிச்சாமியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்