பாம்பனில் வெடிகுண்டு பிரிவு போலீசார் தீவிர சோதனை

ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் பகுதியில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளார்களா என்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-05-03 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் பகுதியில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளார்களா என்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாருக்கு தகவல்

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடத்தல் நடவடிக்கைகள் அதிக அளவில் உள்ளதாக போலீசார் கருதுகின்றனர். அடிக்கடி போதைப்பொருட்கள், கடத்தல் தங்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் ராமேசுவரம் பாம்பன் அக்காள் மடம் கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல்கள் வந்தன. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழுவை சேர்ந்த போலீசார், அக்காள்மடம் கடற்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர தேடுதல்வேட்டை

அப்போது வெடிகுண்டுகளை தேடி கண்டுபிடிக்கும் டிடெக்டர் கருவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதற்காக இங்குள்ள வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனை மர காட்டுப்பகுதிக்குள் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 1 அடி ஆழத்தில் குழிகளை தோண்டினர். அங்கு வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் புதைத்து வைத்து உள்ளார்களா? என தேடுதல்வேட்டை நடத்தினர். இந்த தகவல்கள் அறிந்ததும் உள்ளூர்மக்கள் அங்கு திரண்டனர். இதனால் சோதனையை கைவிட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இலங்கையில் கடந்த 2006-ம் ஆண்டில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது அங்கிருந்து தப்பி வந்த விடுதலைப்புலிகள் சிலர், ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் தங்கச்சிமடம் கடற்கரை பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களை புதைத்து வைத்து விட்டு சென்றதாக தற்போது தகவல் கிடைத்து உள்ளது.

விசாரணை

அதன்ேபரில் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். தற்போது வரை சந்தேகத்துக்கு இடமான எந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு எந்த பொருளாவது கிடைத்தால்தான் அதுபற்றிய தகவல்களையும் விசாரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் வசித்த வீட்டின் அருகில் இருந்து ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்