கால்வாயில் வீசப்பட்ட குறைமாத சிசு உடல்

குடியாத்தத்தில் குறைபிரசவத்தில் பிறந்த சிசு உடல் கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-20 17:09 GMT

சிசு உடல்

குடியாத்தம் டவுன் பெரியார் நகர் கூடநகரம் ரோடு பகுதியில் நேற்று காலையில் கால்வாயில் குறைபிரசவத்தில் பிறந்த சிசு உடல் ஒன்று மிதப்பதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். அவர்கள் உடனடியாக இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டவுன் போலீசாரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் விரைந்து வந்தனர்.

கால்வாயில் பார்த்தபோது 5 அல்லது 6 மாத சிசு ஒன்று கருச்சிதைவு அல்லது குறை பிரசவத்தில் பிறந்ததா என தெரியாத நிலையில் கிடந்தது. சிசு வீசப்பட்டு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

அந்த சிசுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அது பெண் சிசுவா அல்லது ஆண் சிசுவா என கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

சிசு உடலை வீசிச்சென்றவர்கள் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்