அரூர்:
அரூர் அருகே உள்ள பெத்தூர் காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு புளிய மரத்தில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.