மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் ஆகியவை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Update: 2022-11-17 17:42 GMT

மதுரை, 

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் ஆகியவை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

துணிக்கடை தொழிலாளி

கோவை டீச்சர்ஸ் காலனி கருணைநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசங்கர் (வயது 28). இவர், மதுரையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி, வேலைக்கு சென்றபோது கோரிப்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதனை தொடர்ந்து டீன் ரத்தினவேல் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு குழுவினர் மூலம் முத்துசங்கரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், எலும்புகள் ஆகியவை எடுக்கப்பட்டன.

விமானத்தில் பறந்த இதயம்

இதனை தொடர்ந்து, இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதயம், நுரையீரல் ஆகியவை பெட்டியில் வைக்கப்பட்டு, நேற்று காலை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 15 நிமிடத்தில் விமான நிலையத்திற்கு உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன. போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க தேவையான முன் ஏற்பாடுகளை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் செய்திருந்தனர். விமானத்தில் இதயம், நுரையீரல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, உறுப்பு மாற்று சிகிச்சைக்கு காத்திருந்த நோயாளிகளுக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபோல், கல்லீரல், கண்கள், எலும்பு, சிறுநீரகம் ஆகியவை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக அளிக்கப்பட்டன. உடல் உறுப்பு தானம் அளித்த முத்துசங்கரின் குடும்பத்தினர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்