உடுமலை பகுதியில் சில விவசாயிகள் பந்தல் அமைக்காமல் நிலத்தில் படர விட்டு புடலை சாகுபடி செய்து வருகின்றனர்.
பந்தல் காய்கறிகள்
உடுமலை பகுதியில் காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் புடலை, பாகல், பீர்க்கன், அவரை உள்ளிட்ட பந்தல் காய்கறிகளின் சாகுபடி குறைவாகவே உள்ளது.பந்தல் அமைப்பதற்கு அதிக செலவு பிடிப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்தநிலையில் ஒருசில விவசாயிகள் பந்தல் அமைக்காமல் தரையில் படர விட்டு புடலங்காய் சாகுபடி செய்துள்ளனர்.
வீரிய ரகங்கள்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கல் தூண்கள் அமைத்து நிரந்தர பந்தல் அமைப்பதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதுள்ளது.ஆனால் பல ஆண்டுகள் பயன்படுத்த முடியும்.தற்காலிக பந்தல் அமைப்பதற்கான செலவை உறபத்திச் செலவில் சேர்க்க வேண்டிய நிலையே உள்ளது.இதுபோன்ற சிக்கல்களால் பந்தல் சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் இருந்தோம். தற்போது தரையில் படர விட்டு சாகுபடி மேற்கொள்ளும் வகையிலான புதிய வீரிய ரகங்கள் வந்துள்ளன.இந்த ரக புடலை விதைகளை போதிய இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.மேலும் உரப் பரிந்துரைகளின் அடிப்படையில் போதுமான அளவில் இயற்கை உரங்களை வழங்கலாம்.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் நல்ல வடிகால் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் காய்கள் மட்டுமல்லாமல் பயிர்களும் சேதமடையக் கூடும். விதைத்த 50 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஒரு ஏக்கருக்கு 6 டன்கள் புடலங்காய் வரை மகசூல் பெற முடியும். வழக்கமாக புடலை ரகங்களில் காணப்படும் நோய் தாக்குதல்கள் இந்த ரகத்தில் சற்று குறைவாகவே காணப்படுவதால் பராமரிப்புச் செலவு குறைவாகவே இருக்கும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.