விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை ரத்து
கன்னியாகுமரி கடலில் நேற்று பலத்த காற்று காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் நேற்று பலத்த காற்று காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபம்
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குரவத்து தாமதமாக தொடங்குவதும், இடையே சில மணிநேரம் நிறுத்தி விட்டு பின்னர் தொடங்குவதுமாக இருந்தது.
படகு சேவை ரத்து
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அதிகாலையிலேயே கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். அந்த காட்சியை பலர் உற்சாகமாக செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். அதே சமயத்தில் கடல்நீர் மட்டம் தாழ்வு மற்றும் பலத்த காற்று காற்று காரணமாக நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.