மனோரா சுற்றுலாதளத்தில் படகு சவாரி, சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு வந்தது
மனோரா சுற்றுலாதளத்தில் படகு சவாரி, சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு வந்தது
சேதுபாவாசத்திரம் அருகே மனோரா சுற்றுலாதளத்தில் படகு சவாரி, சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு வந்தது.
மனோரா
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் அமைந்துள்ள நினைவு சின்னம் தான் மனோரா. அறுகோன வடிவில் அமைந்துள்ள மனோரா தஞ்சை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய நகரங்களுக்கு 12 கி.மீ. தூரம் மையத்தில் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தளம் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்பட்டது. இதனால் 10 ஆண்டுகளாக மனோராவை காண பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் தொல்லியல்துறை மூலம் மராமத்து செய்து சீரமைக்கப்பட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதையடுத்து சுற்றுலா தளத்்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
படகுசவாரி, சிறுவர் பூங்கா
மனோரா சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் விதமாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் ரூ.49 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் படகுக்குழாம், ரூ.43 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பயிற்சி மையக்கட்டிடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் மற்றும் ரூ.1 கோடியே 78 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் அமைக்கப்பட்டது.
இதனை கடந்த அக்டோபர் மாதம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தற்போது படகுசவாரி, சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்கு வந்ததால் தினமும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் வந்து படகுசவாரியும், பூங்காவில் விளையாடியும் மகிழ்ந்தனர். இதனால் மனோரா சுற்றுலாதளம் களைகட்டி வருகிறது.