கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆண்டுக்கு 90 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அருகில் மற்றொரு பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தா, குகன், பொதிகை ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில் மெர்ஜி எனும் படகு, கடந்த மாதம் 21-ந்தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தது. இந்த படகு இன்று(வெள்ளிக்கிழமை) பூம்புகார் படகு தளத்தை ஆழப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபடஉள்ளது. இதற்காக ராட்சத கிரேனை ஏற்றிக்கொண்டு அந்த படகு விவேகானந்தர் நினைவு மண்டப பாறையின் அருகில் கடலின் நடுவே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.