வனத்துறையினருக்கு போக்கு காட்டும் பி.எம்.-2 காட்டு யானை

தேவாலாவில் பெண்ணை தாக்கி கொன்ற பி.எம்.-2 காட்டு யானை வனத்துறையினருக்கு தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. இதனால் டிரோன் மூலம் கண்காணித்து தேடி வருகின்றனர்.

Update: 2022-12-03 18:45 GMT

கூடலூர், 

தேவாலாவில் பெண்ணை தாக்கி கொன்ற பி.எம்.-2 காட்டு யானை வனத்துறையினருக்கு தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. இதனால் டிரோன் மூலம் கண்காணித்து தேடி வருகின்றனர்.

காட்டு யானை

கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியில் கடந்த மாதம் 20-ந் தேதி காட்டு யானை வீட்டை சேதப்படுத்தியது. தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த பாப்பாத்தி (வயது 55) என்ற பெண்ணை தாக்கி கொன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவாலா பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட காட்டு யானையை அடையாளப்படுத்தி பி.எம்.-2 என வனத்துறையினர் பெயரிட்டனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உள்பட 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில நாட்களாக கேரள எல்லையில் முகாமிட்டிருந்தது.

போக்கு காட்டுகிறது

இந்தநிலையில் நேற்று முன்தினம் புளியம்பாரா வனப்பகுதி வழியாக கோல்கேட் பகுதிக்கு காட்டு யானை இடம் பெயர்ந்தது. இதைத்தொடர்ந்து கும்கி யானைகள் வசிம், விஜய், சீனிவாசன், சுஜெய் வரவழைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் விரைந்து வந்து ஆலோசனை வழங்கினார். பின்னர் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் ராஜேஷ்குமார், மனோகரன், விஜயராகவன் வரவழைக்கப்பட்டனர். இந்தநிலையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டும் வகையில் இரவோடு இரவாக காட்டு யானை இடம் பெயர்ந்து முண்டக்கொல்லி வனப்பகுதிக்குள் சென்றது.

டிரோன் மூலம் கண்காணிப்பு

இதைத்தொடர்ந்து டிரோன் மூலம் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மயக்க ஊசி செலுத்துவதற்கு வசதியாக உள்ள இடத்துக்கு காட்டு யானை வருவதில்லை. சிறப்பு குழுவினர், வன ஊழியர்கள் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காட்டு யானை மிகவும் ஆக்ரோஷத்துடன் உள்ளது. இதனால் அதன் அருகே செல்ல முடியவில்லை. இருப்பினும் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்