குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்கக்கோரி புதுக்கோட்டை அருகே கடைகள் அடைப்பு; உண்ணாவிரதம்

குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்கக்கோரி புதுக்கோட்டை அருகே கடைகளை அடைத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-24 18:28 GMT

கடைகள் அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள் உள்ளன. இதில், கல்லாலங்குடி ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் 9 வார்டுகளும், 17 குக்கிராமங்களும் உள்ளன. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அப்பகுதியில் உள்ள பாலைய குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்கக்கோரி கல்லாலங்குடி ஆர்ச் நுழைவுவாயில் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ேநற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

பழுதடைந்த சாலைகள்

கல்லாலங்குடி ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, எங்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கல்லாலங்குடி ஊராட்சி பகுதியில் உள்ள பாலைய குளத்தில் மண் எடுத்து பழுதடைந்த சாலைகள் சமப்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தனிநபர் அளித்த தவறான புகாரால் மீதமுள்ள சாலைகளை சமப்படுத்த அதிகாரிகள் மண் எடுக்க அனுமதி மறுத்து உள்ளனர். இதனால் சாலைகளை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கல்லாலங்குடி ஊராட்சி பகுதியில் இஸ்லாமியர்களுக்கு மயானம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷா ராணி, கிராம வளர்ச்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி கிராமம்) கோகுலகிருஷ்ணன் மற்றும் ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு கல்லாலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனைதொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது ஆதார்கார்டு, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்