குரூப்-4 தேர்வு எழுத அனுமதிக்காததால் சாலை மறியல்

குடியாத்தத்தில் குரூப்-4 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-24 15:12 GMT

குடியாத்தத்தில் குரூப்-4 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

குரூப்-4 தேர்வு

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் குரூப்-4 தேர்வு எழுத 8 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக குடியாத்தம் பகுதியில் 27 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

தேர்வு எழுத வருபவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூட மையத்திற்கு வர வேண்டும், ஹால்டிக்கெட் உள்ளிட்டவைகளை சரிபார்த்த பின் 8.50 மணி முதல் தேர்வு அறைகளில் அமர்த்தப்படுவார்கள். 9 மணிக்கு தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரியின் கதவுகள் மூடப்படும். அதன்பின் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 8.50 மணிக்கு ஹால்டிக்கெட் சரிபார்த்தபின் தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். 9 மணி அளவில் கதவுகள் பூட்டப்பட்டன. பல இடங்களில் 9 மணிக்கு மேல் சில நிமிடங்கள் தாமதமாக வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் கால தாமதத்திற்கான பல்வேறு காரணங்களை கூறியும் அவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். இருப்பினும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதாமல் அழுதபடியே திரும்பி சென்றனர்.

சாலை மறியல்

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 50-க்கும் மேற்பட்டோர் 9 மணிக்கு மேல் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அப்போது தாமதத்திற்கான பல்வேறு காரணங்களை தெரிவித்தும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தேர்வு எழுத வந்தவர்கள் திடீரென கல்லூரிக்கு வெளியே குடியாத்தம்- வேலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் வந்த பெற்றோர்கள், உறவினர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் தேர்வு எழுதுவதற்கான விதிமுறைகளை விரிவாக எடுத்து கூறினர். மேலும் தாமதமாக வருபவர்களை அனுமதிக்க இயலாது எனவும் தெரிவித்தனர். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 10 நிமிடத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகள்

குடியாத்தம் பகுதியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 8 ஆயிரத்து 486 பேரில் 1,412 பேர் தேர்வு எழுதவில்லை. காலை முதலே தேர்வு மையங்களை குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா உள்ளிட்ட வருவாய் துறையினர் பார்வையிட்டனர். மேலும் தேர்வு எழுத வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு உதவியாளர் கொண்டு தேர்வு எழுதினார்கள். அதனை அதிகாரிகள் நேரடியாக கண்காணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்