தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் பொருட்கள் வழங்காததால் முற்றுகை
தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் பொருட்கள் வழங்காததால் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் பலர் பல விதங்களில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மாதம் 100 ரூபாயில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையில் மாத தவணை மற்றும் ஒரே தவணை என அறிவித்து, அதில் முதலீடு செய்பவர்களுக்கு மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் சேர்த்துவிடும் முகவர்களுக்கு நபர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பல சலுகைகள் அறிவித்து பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனம் தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டிய பொருட்களை வழங்க காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அதனால் திட்டத்தில் பணம் கட்டிய பொதுமக்கள் தங்களின் ஏஜென்டுகளை பொருட்களை பெற்று தரும்படி நெருக்கடி கொடுத்ததால் ஏஜென்டுகள் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனையடுத்து அங்கு வந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களுக்கு சேர வேண்டிய பொருட்களை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறி பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.