வெற்றியூர் வெடி விபத்தால் முற்றுகை போராட்டம் வாபஸ்; பா.ஜ.க.வினர் 200 பேர் கைது
வெற்றியூர் வெடி விபத்தால் முற்றுகை போராட்டம் வாபஸ் வாங்கிய பா.ஜ.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணத்தில் செயல்பட்டு வரும் தனியார் சுண்ணாம்புக்கல் ஆலையில் நடைபெறும் அத்துமீறலையும், பெரிய திருக்கோணத்தில் இருந்து பனங்கூருக்கு செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்ததையும் கண்டித்து நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது. இதற்காக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையிலான பா.ஜ.க.வினர் நேற்று அரியலூருக்கு வந்தனர். அப்போது போலீசார் அவர்களை நெடுஞ்சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது கருப்பு முருகானந்தம் பேசுகையில், இன்று (அதாவது நேற்று) வெற்றியூரில் உள்ள வெடி தயாரிக்கும் ஆலையில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த முற்றுகை போராட்டம் கைவிடப்படுகிறது. இன்னும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார். இதையடுத்து போலீசார் 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை கைது செய்தனர். அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.