பிரசவித்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு
பிரசவித்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் அந்தப் பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், அடி வயிற்றில் காயங்கள் உருவாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனே அந்த பெண் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். உடனே அங்கிருந்த டாக்டர்கள், பிரசவம் பார்த்த ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த பெண், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நடந்த விவரங்களை கூறினார். அப்போது டாக்டர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்து பார்த்த போது பிரசவத்தின் போது ரத்தப்போக்கை கட்டுப்படுத்த வயிற்றுப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பஞ்சு அகற்றாமல் அப்படியே இருந்தது தெரியவந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சையின்போது நடந்த இந்த அலட்சியம் குறித்து சுகாதார துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.