பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பெண்கள் உடல் சிதறி பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உடல் சிதறி பலியாகினர்.
தா்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியை சேர்ந்தவர் சரவணன். தொழில் அதிபரான இவர் அந்த பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலை உரிய உரிமம் பெற்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அதில் திருமணம், கோவில் விழாக்கள் மற்றும் இறுதிச்சடங்குக்கான பட்டாசுகள், வாணவெடிகள், வேட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்த ஆலையில் அதே பகுதியை சேர்ந்த காவேரி என்பவரின் மனைவி முனியம்மாள் (வயது 63), பொன்னுமலை மனைவி சிவாலிங்கம் (55), சேலம் மாவட்டம் கோவில்வெள்ளார் கிராமத்தை சேர்ந்த பூபதி மனைவி பழனியம்மாள் (55) ஆகியோர் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2 பெண்கள் பலி
நேற்று காலை அவர்கள் வழக்கம் போல் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆலை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்தில் சிக்கி முனியம்மாள், பழனியம்மாள் ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். மேலும் சிவாலிங்கம் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
காரணம் என்ன?
இந்த வெடி விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பட்டாசு தயாரிக்கும் இடத்தில் வெடிமருந்தை கையாளும்போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அதாவது வெடி மருந்து கலவையில் கலந்துள்ள கல் துகள்கள் உரசியதால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.