கிராமத்தில் கருப்பு கொடி கட்டிய விவசாயிகள்

Update: 2023-06-11 17:46 GMT


கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பவானி பாசன பகுதிகள்

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியாகும். பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் கிராம ஊராட்சி வரை உள்ளகீழ்பவானி பாசன கால்வாயில் ரூ.900 கோடி மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆனால் கான்கிரீட் தளம் அமைத்தால் கால்வாயின் இருபுறமும் உள்ள லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு, பறவைகள் அழிந்து விடும். விவசாய பணிகளில் தொய்வு ஏற்படும்.

எனவே கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை எண் 276-ஐ உடனடியாக ரத்து செய்ய கோரியும், கால்வாயை முழுமையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்றும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

உண்ணாவிரதம்

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கீழ்பவானி பாசன கடைமடை பகுதியான முத்தூர் - மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு கிராமங்களில் விவசாயிகள் நேற்று காலை பொது இடங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் ஏராளமான விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் பெருந்துறை பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.

கடைகள்

நத்தக்காடையூர் கடைவீதி, காங்கயம் சாலை, ஈரோடு சாலை, திருப்பூர் சாலை, முத்தூர் சாலை, கண்ணபுரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், துணிக்கடைகள், எலக்ட்ரிக் கடைகள், உரக்கடைகள், போட்டோ ஸ்டுடியோக்கள், மளிகை கடைகள், கணினி நிறுவனங்கள், பர்னிச்சர் கடைகள், மாவு மில்கள், பலகார கடைகள், மருந்து கடைகள் உட்பட அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் வர்த்தகர்கள், கடைக்காரர்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பழையகோட்டை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், மருதுறை வருவாய் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்தனர்.

மேலும் செய்திகள்