கரும்பாறைஅரசு பள்ளிக்கூடத்தில் கலெக்டர் ஆய்வு மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார்
கரும்பாறை அரசு பள்ளிக்கூடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தாா்
தொட்டகோம்பை அருகே உள்ள கரும்பாறை அரசு பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
கலெக்டர் ஆய்வு
டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டையம்பாளையம் ஊராட்சி அய்யப்பா நகரில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் கொண்டையம்பாளையத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள தூய்மை பணியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
விழிப்புணர்வு முகாம்
பெருமுகை ஊராட்சிக்குட்பட்ட தொட்டகோம்பை கிராமத்தில் ஆய்வு செய்த கலெக்டர், மலைவாழ்மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பெருமுகை ஊராட்சி கரும்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கலெக்டர் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மாணவ- மாணவிகளிடம் அவர் கலந்துரையாடினார்.
கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகரில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் (ஆவின்) மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இந்த முகாமை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.
பரிசுகள்
மேலும் 3 பேருக்கு சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கான பரிசுகளையும், 3 பேருக்கு சிறந்த கறவை மாடு பராமரிப்புக்கான பரிசுகளையும், 3 பேருக்கு சிறந்த கிடாரி கன்று பராமரிப்புக்கான பரிசுகளையும், 3 பேருக்கு தீவன மக்காச்சோள விதைகளையும், 5 பேருக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தில் கறவை கடனுதவிகளையும் மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு கைத்தெளிப்பான், தார்ப்பாய்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.