சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னாங்கல்பாளையத்தில், பள்ளி,குடியிருப்புகளுக்கு அருகே அமைய உள்ள சாய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி கூறப்படுவதாவது:-
சாய ஆலை அமைக்க எதிர்ப்பு
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னாங்கல்பாளையம் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் தற்போது அந்த பள்ளியின் அருகில் 40 மீட்டர் தொலைவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக சாய ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாய ஆலை அமைப்பதால் குடியிருப்பு மற்றும் பள்ளியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும், தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சாய ஆலையிலிருந்து வெளிவரும் புகையால், பள்ளி குழந்தைகளுக்கு சுவாச பிரச்சினை வர வாய்புள்ளதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வீடுகளில் கருப்புக்கொடி
மேலும் இந்த சாய ஆலை வருவதை தடை செய்யக் கோரி மாவட்ட கலெக்டர், தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் ஆகியோருக்கு மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கரைப்புதூர் ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சாய ஆலை அமைவதை தடுக்கவில்லை என்றால் அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மேலும் சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்களை சந்தித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி ஆலோசனைகளையும், ஆதரவையும் தெரிவித்தார்.