ஏளூரில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
நாமக்கல் அருகே அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏளூரில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.
அங்கன்வாடி மையம்
நாமக்கல் அருகே உள்ள புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஏழூர் ஊராட்சி. இங்குள்ள அம்பேத்கர் நகர் புதுக்காலனி பகுதியில் ஊரக வளர்ச்சி துறை மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அப்பகுதி மக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்து இருந்தனர்.
இதனிடையே அங்கு அங்கன்வாடி மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், சமூதாயக் கூடத்தை கட்டித்தரக் கோரியும் குடியரசுதினத்தையொட்டி நேற்று அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தினர்.
வீடுகளில் கருப்புக்கொடி
இது குறித்து அம்பேத்கர் நகர், புதுக்காலனி மக்கள் கூறியதாவது:-
அங்கன்வாடி மையம் அமைக்க ஊரக வளர்ச்சித்துறை தேர்வு செய்துள்ள இடமானது, சில ஆண்டுகளுக்கு ஆதி திராவிடர் நலத்துறையால் தனிநபர் ஒருவரிடம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்டது போக மீதம் இருந்த இடத்தை புறம்போக்கு நிலமாக வருவாய்த்துறை மாற்றிவிட்டது. அங்கு சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என நாங்கள் 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் அங்கு அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மனு அளித்தோம். ஆனால் எங்களின் கோரிக்கை பொருட்படுத்தாமல், மனுக்களை தள்ளுபடி செய்து அங்கன்வாடி மையம் கட்ட மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதை கண்டித்து முதல் கட்டமாக எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.