நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் -அண்ணாமலை பேச்சு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2022-06-26 22:28 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று இரவு நடந்தது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

இதில் மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, எம்.சக்கரவர்த்தி, ஆர்.சி.பால்கனகராஜ், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், தனசேகர், காளிதாஸ், விஜய் ஆனந்த் உள்பட மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

வெற்றி மேல் வெற்றி

கட்டமைக்கப்பட்ட பிம்ப அரசியல் நடந்துவரும் மாநிலங்களில் எல்லாம் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்து வருவதால் பா.ஜ.க. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து வருகிறது. பா.ஜ.க.வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இதனால் வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது.

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார். பா.ஜ.க.வின் சிறப்பான சமூக நீதி கொள்கைக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆகும். தமிழகத்தில் மக்களை குழப்பி வரும் செயல்பாட்டில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. சமூக நீதி பற்றி பேசும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்காமல் இருப்பது ஏன்?.

25 எம்.பி.க்கள்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி போல அதாவது ஒரு குட்டி மோடி போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்கு மோடி போல கடுமையாக உழைக்க வேண்டும். நிச்சயம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்த மாற்றம் நடக்கும். தமிழகத்தில் தாமரை மலரும். இந்த மண்ணில் என்றென்றும் பா.ஜ.க. ஆட்சி தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வல்லரசு நாடாக...

மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

2047-ம் ஆண்டில், அதாவது சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக கட்டமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தி வருகிறார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெண்களுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் தவறான வாக்குறுதிகளை அளித்து விட்டோம் என்று மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி கிரீடம்-செங்கோல்

கூட்டத்தில் அண்ணாமலைக்கு மாவட்ட தலைவர் மனோகர் வெள்ளி கிரீடம் மற்றும் செங்கோல் வழங்கினார். இதேபோல மாவட்ட பொதுச்செயலாளர் சி.ராஜா நவரத்தினங்கள் பதித்த விநாயகர் சிலையை வழங்கினார்.

பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ.க. அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்பட பலர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்