உதவி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதா காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டியில் தினசரி மார்க்கெட் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, உதவி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தினசரி மார்க்கெட் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, உதவி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைகளை அகற்ற எதிர்ப்பு

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றி விட்டு, அங்கு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடியில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடிக்காமல், மற்றொரு இடத்தில் கூடுதலாக கடைகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

காத்திருப்பு போராட்டம்

இதையடுத்து பா.ஜ.க.வினர் நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, பிரசார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணகுமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் நீதி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலரும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இதுதொடர்பாக உதவி கலெக்டர் தலைமையில் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்