புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் பேனா சின்னத்திற்கு பா.ஜ.க. எதிர்ப்பு
புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் பேனா சின்னத்திற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி எதிரே நகராட்சி சார்பில் ரூ.9 கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி நினைவாக 10 அடி உயரத்தில் பேனா சின்னம் அமைக்கப்படுகிறது. சென்னையில் கடலில் பேனா சின்னம் அமைக்க ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது. இதற்கிடையில் புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் பேனா சின்னம் அமைக்கப்படுவது விவாதமானது. இந்த நிலையில் நகராட்சி பூங்காவில் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக்கோரி பா.ஜ.க. சார்பில் பூங்காவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக நகராட்சி பூங்காவிற்கு புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர். மேலும் வேனில் ஏற்றி அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். சென்னையில் கடலில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில், புதுக்கோட்டையில் நகராட்சி பூங்காவில் திடீரென பேனா சின்னம் அமைக்கப்படுவதாகவும், அதனால் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.