ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சி - இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

Update: 2023-01-19 08:01 GMT

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மறைந்த மூத்த தலைவர் பா.ஜீவானந்தத்தின் 60-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-

தமிழ்நாட்டுக்கு தற்போது ஜீவா, மிக முக்கியமாக தேவைப்படுகிறார். வகுப்பு வாதம் தலைநோக்கி நிற்கிறது. நாட்டையே களேபரம் செய்கின்ற அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லி ஒரு நாட்டையே அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், கடவுளின் பெயரால், மொழியின் பெயரால் நாட்டு மக்களை பிளவுபடுத்தி தங்களுடைய சுயநல கொள்கையை நிறைவேற்றி கொள்ள பா.ஜ.க.வினர் முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் எதிர்த்து நின்று போராடியவர் ஜீவா. அவருடைய நினைவு நாளில் வகுப்புவாத பேராபத்தை முறியடிக்க அனைவரும் சபதம் ஏற்போம்.

எடப்பாடி பழனிசாமி, 2024-ம் ஆண்டு சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் வந்தால் நல்லது. நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என குறுகிய சிந்தனையுடன் செயல்படுகிறார். அதனால் இந்த திட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்து உள்ளது.

இந்த தவறான சிந்தனை, அவர் சொல்லி இருக்கும் கருத்து அவருடைய கட்சிக்கும், கொள்கைக்கும் புறம்பானது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட ஏற்கவில்லை. அது நடைமுறை சாத்தியமற்றது. ஏற்க முடியாத கொள்கை.

2 மாநிலத்தில் தேர்தல் முடிந்து இருக்கின்றது. 2023-ல் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிந்த பிறகுதான் நாடாளுமன்ற தேர்தல் 2024-ல் நடைபெற உள்ளது. அப்போது இதெல்லாம் கலைக்கப்படுமா?.

கவர்னர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறார். மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார். அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோரை நிராகரிக்கிறார்.

இப்படிப்பட்டவர் தமிழ்நாட்டில் கவர்னராக தொடரக்கூடாது. அவரை திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் போராடி கொண்டிருக்கிறார்கள். கவர்னரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கவர்னர் பதவியை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்