பெண் டாக்டரை மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது

பணியின்போது ஹிஜாப் அணிந்திருந்ததால் பெண் டாக்டரை மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-05-27 18:45 GMT

வேளாங்கண்ணி:

பணியின்போது ஹிஜாப் அணிந்திருந்ததால் பெண் டாக்டரை மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண் டாக்டர்

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஜன்னத் பிர்தவுஸ் என்பவர் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

திருப்பூண்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அமிர்தகடேஸ்வரர் மகன் புவனேஸ்வர்ராம்(வயது 30). பாரதீய ஜனதா கட்சியில் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவராக உள்ள இவர், கடந்த 24-ந் தேதி சுப்பிரமணியன் என்பவரை சிகிச்சைக்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

வாக்குவாதம்

அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ஜன்னத் பிர்தவுசும், செவிலியரும், சுப்பிரமணியனுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்துள்ளனர். இதை தொடர்ந்து அவரை மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

அதற்கு புவனேஸ்வர்ராம், இங்கு டாக்டர் இருக்கும்போது ஏன் நாகைக்கு அனுப்புகிறீர்கள்? என கேட்டு டாக்டரிடம், புவனேஸ்வர்ராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹிஜாப் அணிந்ததால் மிரட்டல்

மேலும் அவர் டாக்டர் ஜன்னத் பிர்தவுசை பார்த்து, ஏன் ஹிஜாப் அணிந்து கொண்டு பணி செய்கிறீர்கள்?, ஹிஜாப் அணியக்கூடாது. அப்படி அணிந்து பணி செய்தால் உங்கள் பணிக்கு ஆபத்து ஏற்படுத்துவேன் என்று மிரட்டி தகராறு செய்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை அவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

பா.ஜ.க. நிர்வாகி கைது

இது குறித்து டாக்டர் ஜன்னத் பிர்தவுஸ் கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நிர்வாகி புவனேஸ்வர்ராமை கைது செய்தனர்.

பின்னர் அவரை கீழ்வேளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்