பா.ஜ.க. பேனர் கிழிப்பு
நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி வைத்திருந்த பா.ஜ.க. பேனர் கிழிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' சினிமா படம், திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள தியேட்டரில் கடந்த 10-ந்தேதி முதல் திரையிடப்பட்டு வருகிறது. இதையொட்டி ரஜினிகாந்தின் சினிமா படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவரது ரசிகர்கள் தியேட்டர் அருகே பேனர்களை வைத்திருந்தனர்.
இதேபோல் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி சார்பிலும் தியேட்டர் அருகே வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பா.ஜ.க.வினர் வைத்த பேனரில் சில இடங்களை மர்ம நபர்கள் பிளேடால் கிழித்து விட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில், பா.ஜ.க. நகர செயலாளர் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வினர் வைத்த பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.