பாஜகவினரை அண்ணாமலை கட்டுப்படுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜகவினரை அண்ணாமலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-30 10:52 GMT

கோப்புப்படம்

சென்னை,

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்றார். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் அண்ணாமலையுடனான எடப்பாடி பழனிசாமியின் மோதலுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்ததாக தகவல் வெளியானது. பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "அண்ணாமலையுடன் தகராறு இல்லை" என விளக்கம் அளித்தார்.

இச்சூழலில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது டுவிட்டரில், "பாஜக வாங்கும் இடத்தில் இல்லை. அதிமுகவும் கொடுக்கும் இடத்தில் இல்லை. மத்தியில் ஆளப்போவது மோடி. அதன் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் இருந்தாலே தமிழ்நாட்டுக்கு நல்லது. கூட்டணி என்று ஏற்படுமானால் 25 சீட்டுக்கு குறைவில்லாமல் தந்தாலே இல்லை எனில் தனியாகவே!" என்று பதிவிட்டிருந்தார். பாஜக மாநில பொருளாளர் இந்த கருத்து அதிமுக, பாஜக கட்சி கூட்டணியில் மீண்டும் பூகம்பத்தை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜகவினரை அண்ணாமலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு பாஜகவினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை. பாஜகவினரின் விமர்சனங்களுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது அதிமுகவினருக்கு தெரியும். வேண்டாம் என்று அடக்கி வைத்துள்ளோம். அண்ணாமலை விளக்கம் தராவிட்டால் அவர் சொல்லித்தான் அதிமுகவினரை பாஜகவினர் விமர்சிப்பதாக நினைக்க வேண்டி வரும். அதிமுகவை பாஜக பொருளாளர் விமர்சித்தது அண்ணாமலைக்கு தெரிந்து நடந்ததா? இல்லையா? ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். பாஜக பொருளாளரை கண்டிப்பதாக அண்ணாமலை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்