பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டபோது: குஷ்புவுக்கு ஏன் கோபம் வரவில்லை? கே.எஸ்.அழகிரி கேள்வி

பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங் விளையாட்டு வீராங்கனைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டபோது குஷ்புவுக்கு ஏன் கோபம் வரவில்லை என ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.

Update: 2023-06-19 18:54 GMT

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 'கேக்' வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில், மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி எஸ்.பாஸ்கர், எம்.எஸ்.காமராஜ், பி.வி.தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி, சென்னை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற கடுமையான களப்பணி ஆற்றுவது என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். அனைத்து மனிதர்களும், அனைத்து கலாசாரங்களும், அனைத்து மதங்களும் சமம் என்று சொல்லும் உயரிய நோக்கத்துக்காக ராகுல் காந்தி பணியாற்றுகிறார். அவரது பாதையை பின்பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் செயல்படும்.

ஏன் கோபம் வரவில்லை?

பா.ஜ.க.வில் இருக்கும் குஷ்பு தன்னை ஒருவர் தரக்குறைவாக பேசியதற்காக வருத்தத்தை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி வெளியான உடனேயே தி.மு.க. அந்த நபரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறது. அதற்காக தி.மு.க.வை பாராட்டுகிறேன். குஷ்புவுக்கு வந்த கோபத்தையும் மெச்சுகிறேன். ஆனால் இந்த கோபம், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங், விளையாட்டு வீராங்கனைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டபோது ஏன் அவருக்கு வரவில்லை?

பாட்னாவில் வருகிற 23-ந் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாடு ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் தத்துவங்களின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக இருக்கும். மத்திய அமைச்சரவையில் குற்றம் சாட்டப்பட்ட 33 மந்திரிகள் பதவியில் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு சட்டம், செந்தில் பாலாஜிக்கு ஒரு சட்டமா?

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி எடுத்தனர்

முன்னதாக, சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே, கே.எஸ்.அழகிரி இந்திய ஒற்றுமை நடைபயணக் கொடியை ஏற்றிவைத்தார். அப்போது, காங்கிரசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்