விதானசவுதாவில் முனிரத்னா எம்.எல்.ஏ. திடீர் தர்ணா

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை திரும்ப பெற்றதை கண்டித்து விதானசவுதாவில் காந்தி சிலை முன்பாக முனிரத்னா எம்.எல்.ஏ. திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன், தர்ணாவில் ஈடுபட முயன்ற ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-11 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை திரும்ப பெற்றதை கண்டித்து விதானசவுதாவில் காந்தி சிலை முன்பாக முனிரத்னா எம்.எல்.ஏ. திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன், தர்ணாவில் ஈடுபட முயன்ற ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

முனிரத்னா திடீர் தர்ணா

பெங்களூரு ஆர்.ஆர்.நகர்(ராஜராஜேஸ்வரிநகர்) தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் முனிரத்னா. இவரது தொகுதியில் ஏரி புனரமைப்பு, சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.126 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த நிதியை காங்கிரஸ் அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. மேலும் அந்த நிதியை வேறு சில தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் முனிரத்னா எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நேற்று காலையில் விதானசவுதாவுக்கு வருகை தந்த அவர், அங்குள்ள காந்தி சிலை முன்பாக அமர்ந்து திடீரென்று தர்ணாவில் ஈடுபட தொடங்கினார். தனது தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை மீண்டும் வழங்கும்படி கோரி கையில் பதாகையுடன் முனிரத்னா எம்.எல்.ஏ. தனி ஆளாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் விதானசவுதாவுக்கு விரைந்து வந்தனர்.

ஆதரவாளர்கள் கைது

மேலும் முனிரத்னாவுக்கு ஆதரவாக பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்களும், கையில் பதாகைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை திரும்ப பெற துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் டி.கே.சுரேஷ் எம்.பி.தான் காரணம் என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தியபடிகாந்தி சிலை முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விதானசவுதா வளாகத்தில் எம்.எல்.ஏ.வை தவிர வேறு யாரும் தர்ணா, போராட்டத்தில் ஈடுபட அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட முனிரத்னாவின் ஆதரவாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தார்கள். அப்போது அவர்கள், டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்றார்கள்.

எடியூரப்பா சமாதான பேச்சு

அதன்பிறகு, முனிரத்னா எம்.எல்.ஏ. மட்டும் தனி ஆளாக அமர்ந்து மவுனமாக தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்ததும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா விதானசவுதாவுக்கு வந்தார். பின்னர் அவர், முனிரத்னா எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தர்ணாவை கைவிடும்படியும் அவரிடம் எடியூரப்பா கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, தனது தர்ணாவை கைவிடுவதாக முனிரத்னா எம்.எல்.ஏ. தெரிவித்தார். பின்னர் விதானசவுதாவில் இருந்து அவர் புறப்பட்டு சென்றார்.இந்த சம்பவத்தால் விதானசவுதாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்