பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிமிற்கு எதிர்ப்பு

குடியாத்ததிற்கு வந்த பா.ஜ.க.சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமிற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-23 17:03 GMT

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு செயலாளர்

குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் காப்பீடு திட்டம் குறித்து நடைபெற்ற சிறப்பு முகாமில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் தாழையாத்தம் பஜார் மற்றும் அண்ணா தெருவில் உள்ள பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று அவர்களை சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து குடியாத்தம் சித்தூர் கேட் அருகே உள்ள அசனல்லிபேட்டை பகுதியில் உள்ள ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளருமான ஏ.இஸ்மாயில் வீட்டிற்கு வேலூர் இப்ராஹிம் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் எதிர்ப்பு

அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு இருந்தனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, செந்தில்குமாரி, முத்துக்குமார், பாலசுப்பிரமணியம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சித்தூர் கேட் பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் இப்ராஹிமுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திரண்ட இஸ்லாமியர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

அதன் பின்னர் வேலூர் இப்ராஹிம் ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இஸ்மாயில் வீட்டுக்கு சென்று அவரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்