தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம்

தி.மு.க. அரசைக் கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2022-07-05 18:46 GMT

நாகர்கோவில்,

தி.மு.க. அரசைக் கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரத போராட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ஜெகநாதன், வினோத், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

கோஷம்

போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர்கள் தேவ், சொக்கலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் கிருஷ்ணன், கிருஷ்ணகுமார், மாநகர பார்வையாளர்கள் அஜித்குமார், நாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன், சுனில், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் தி.மு.க.அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. நேற்று காலையில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை வரை நடந்தது.

பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

வாக்குறுதி நிறைவேற்றவில்லை

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மனசாட்சியில்லாத அரசாக இந்த அரசு விளங்குகிறது. மத்திய அரசு இரண்டு முறை பெட்ரோல்-டீசல் விலையை குறைத்த பிறகும்கூட தி.மு.க. அரசு பெட்ரோல்- டீசல் விலையை குறைக்கவில்லை. தமிழகத்தை காக்கத்தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் கட்சியின் அமைப்பு ரீதியாக 60 மாவட்டங்களில் உண்ணாவிரதம் நடந்து வரும் நிலையில் அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு பந்தல் அமைக்க நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு வரை அனுமதி மறுக்கப்பட்டது. பல போராட்டத்துக்கு பிறகு தான் பந்தல் அமைக்க அனுமதி அளித்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்