பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில், மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பார்வையாளர் ஏ.சி.முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ், மகளிர் அணி தலைவி சுமதி உள்பட பா.ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், மின் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும், ஏழை மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
வாபஸ் பெற வேண்டும்
இதுகுறித்து பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், மின் கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மத்திய அரசின் மீது குறை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு யாரையும் வற்புறுத்தவில்லை. பொய்யான தகவலை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். கரூரில் 27-ந் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும், என்றார்.
ஆத்தூர்
ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் சண்முகநாதன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெய ஆனந்த், மாணிக்கம், மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சபரீச ராஜா வரவேற்று பேசினார். இதில் மாநில செயலாளர் பொன் பால கணபதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பா.ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது/ இதற்கு மாவட்ட தலைவர் சுதீர் முருகன் தலைமை தாங்கினார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, நகர தலைவர் சின்ன மாதையன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஹரிராமன், கலைச்செல்வன், திருமூர்த்தி உள்பட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.