எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இணைந்து செயல்பட வலியுறுத்தினார்கள்.

Update: 2023-02-04 00:26 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா மறைவெய்தியதை தொடர்ந்து, தி.மு.க. கூட்டணி சார்பில், அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று அவர் வேட்புமனு தாக்கலும் செய்தார்.

இந்த நிலையில், இரு பிரிவாக இருக்கும் அ.தி.மு.க.வில், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு

இருவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், நேற்று காலை பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளரும், மேலிட தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, மாநில தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அடுத்தடுத்து சென்னையில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உடன் இருந்தார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபோது, அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபோது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். சிறிது நேர இடைவெளியில், அ.தி.மு.க.வில் பிரிந்து நிற்கும் இரு தலைவர்களை, பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

யாருக்கு இரட்டை இலை சின்னம்?

ஏற்கனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வில் இரு அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் அளித்த பதிலும், அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து, சென்னை கமலாலயத்தில் பேட்டி அளித்த பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளரும், மேலிட தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களிடம் எதிர்ப்பு மனநிலை

1972-ம் ஆண்டு அ.தி.மு.க. உருவானபோது எம்.ஜி.ஆர். தி.மு.க.வை 'தீய சக்தி' என்று அழைத்தார். அந்த நிலையில் இருந்து, தற்போது 2023-ம் ஆண்டு வரை தி.மு.க. இன்னும் மாறவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான் உயிருடன் இருக்கும் வரை, தி.மு.க.வை "தீய சக்தி" என்றுதான் அழைத்தார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தி.மு.க. என்ற கட்சி, ஒரு தனிப்பட்ட குடும்ப லாபத்திற்காகவும், அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகவும், தொடர்ந்து செயல்படுகிறது. இதனால் மக்களிடையே தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு மனநிலை உள்ளது.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என்ற மக்கள் விரோதப்போக்குகள் ஒருபுறம்.

அது மட்டுமின்றி, தமிழ் கலாசாரத்தின் மீது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் வெறுப்புணர்வும், தாக்குதல்களும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கடைமட்ட கட்ட பஞ்சாயத்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பும், அதைக் கட்டுப்படுத்த வழியில்லாத தி.மு.க.வுக்கு எதிராக, தமிழ் மக்கள் இருப்பதை நமக்கு தெளிவாக காட்டுகிறது.

ஒன்றுபடுவது அவசியம்

தி.மு.க. பணபலம் மற்றும் அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்துவதால், இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போதே ஈரோட்டில் நடப்பதையெல்லாம் பார்த்து வருகிறோம்.

அதனால்தான் இந்த இடைத்தேர்தலில் இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும், அ.தி.மு.க.வும் உறுதியுடன் ஒன்றுபடுவது மிக அவசியம். இன்று (நேற்று) காலை தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் தமிழகம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பேசினோம்.

கால அவகாசம்

இது ஒரு நல்ல முன்னேற்றம், நமது தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சார்பாக சில விஷயங்களை தெரிவித்தேன். அதையெல்லாம் உங்களிடம் தனித்தனியாக, என்ன பேசினோம் என்பதை, இப்போது நான் வெளியிட இயலாது. இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை இருவரிடமும் வலியுறுத்தியுள்ளோம்.

அதற்காக, அ.தி.மு.க.வை இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். வேட்புமனு தாக்கலுக்கு 7-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு எதிராக உள்ளனர். தி.மு.க. அரசு மீது கோபத்தில் இருக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குழப்பம்

இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் (எடப்பாடி பழனிசாமி அணி) வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், கட்சி மேலிட உத்தரவால் திடீரென மனுத்தாக்கல் செய்யாமல் பின்வாங்கினார்.

இதே முடிவைத்தான் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில் முருகனும் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால், அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பெரிய அளவில் குழப்பம் நிலவியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ.க.வின் முடிவைப் பொறுத்துத்தான் அ.தி.மு.க. போட்டியிடுவது உறுதியாகும் என்று தெரிகிறது.

அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஒரே பதில்

பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து சென்ற பிறகு, சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியே வந்தார். அவரிடம் அங்கிருந்த நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதாவது, பா.ஜ.க. தலைவர்கள் உங்களை எதற்காக சந்தித்தனர்?, அ.தி.மு.க.வில் நடப்பது என்ன?, இரு அணிகளும் ஒன்று சேர்வதற்கு சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலாக, "தர்மம் வெல்லும்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த புறப்பட்டு சென்றார்.

பொது வேட்பாளரை நிறுத்த திட்டமா?

அ.தி.மு.க.வில் இரு துருவங்களாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேற்று பா.ஜ.க. மேலிட தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. மேலிடத்தின் தலையீடு இருப்பது உறுதியாகியுள்ளது. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவதால், அவரை எதிர்த்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது. அதற்கு முன்னதாக, அ.தி.மு.க.வில் பிரிந்து நிற்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்கும் முயற்சியைத்தான் நேற்று மேற்கொண்டுள்ளது.

பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அ.ம.மு.க., சசிகலாவின் ஆதரவை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொது வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 20 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏ.சி.சண்முகம், முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த வாக்குகள் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். இதேபோல், அனைவரும் ஒன்றிணையும் பட்சத்தில், தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்றும் பா.ஜ.க. கருதுகிறது. அவ்வாறு, பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்டால், பா.ஜ.க.வின் சின்னமான தாமரையிலேயே போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்