'தி.மு.க.வின் அடக்குமுறைக்கு பா.ஜ.க. அஞ்சாமல் போராடும்'

தி.மு.க.வின் அடக்குமுறைக்கு பா.ஜ.க. அஞ்சாமல் போராடும் என்று பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கூறினார்.

Update: 2022-10-06 19:45 GMT

திண்டுக்கல் மேற்கு மாநகர பா.ஜ.க. தலைவராக இருப்பவர் பால்ராஜ். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இருந்த கார், இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதை அறிந்த பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் நேற்று குடைப்பாறைப்பட்டிக்கு வந்தார். அப்போது கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையிலான நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். பின்னர் தீயில் எரிந்த வாகனங்களை அவர் பார்வையிட்டார். இதையடுத்து வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-


தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் தலைதூக்கி இருக்கின்றன. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட இயக்கங்களை தடை செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் முதல்-அமைச்சர் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு பயங்கரவாத சக்திகளை ஒடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் ஆட்சியை கலைக்க மத்திய அரசு தயங்காது. பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தி.மு.க. இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறோம். தி.மு.க.வில் 85 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக கூறுகிறார். ஆனால் ஆ.ராசா எம்.பி. உள்ளிட்ட சிலர் இந்துக்களை அவதூறாக பேசுவதால் தி.மு.க.வை குற்றம்சாட்டும் நிலை ஏற்படுகிறது. இந்து மதம், இந்துக்கள் குறித்து தி.மு.க.வினர் கண்ணியமாக பேச வேண்டும். தி.மு.க.வின் அடக்குமுறைக்கு பா.ஜ.க. அஞ்சாமல் போராடும். தி.மு.க.வை வீழ்த்துவதே பா.ஜ.க. வேலை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்