தமிழகம் போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய துணைத்தலைவர் பேட்டி
தமிழகம் போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது என பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய துணைத்தலைவர் கூறினார்.
விழுப்புரத்தில் நடந்த கொலையை கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேசிய சிறுபான்மைப்பிரிவு துணைத்தலைவர் வேலூர் இப்ராஹீம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரத்தில் நோன்பு வைத்திருந்த இஸ்லாமிய சகோதரர் இப்ராஹீம் ராஜாவை தி.மு.க.வை சேர்ந்த ரவுடி கும்பல் கொடூரமாக தாக்கி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் இருவரும் கஞ்சா, போதைப்பொருட்கள் உட்கொண்டவர்களாக இருக்கிறார்கள். தமிழகம் போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சி என்றாலே போதைப்பொருட்கள் புழக்கம், ரவுடிகளின் அட்டகாசம், கூலிப்படைகளின் அட்டகாசம் எல்லை மீறிய நிலை தமிழகம் முழுவதும் தொடர்கிறது. இதனை தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த தி.மு.க. அரசு இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது. இதை நான் ஆதாரத்துடன் சொல்கிறேன். இது பொய்யாக இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள். தயவு செய்து சிறுபான்மையின மக்களுக்காக மோடி அரசு வழங்கிய ரூ.313 கோடியை செலவு செய்யுங்கள். அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துங்கள். இந்த நிதியை முறையாக செலவு செய்யாவிட்டால் தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. சிறுபான்மை அணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், நிர்வாகிகள் முரளி, சதாசிவம், ஜெய்சங்கர், வெங்கடேசன், வடிவேல் பழனி, மணிவண்ணன், சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்