ஊழல் செய்பவர்களை விமர்சிக்கும் தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை;சீமான் பேட்டி

ஊழல் செய்பவர்களை விமர்சிக்கும் தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-15 18:45 GMT

குலசேகரம், 

ஊழல் செய்பவர்களை விமர்சிக்கும் தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ரப்பர் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்க பேச்சிப்பாறைக்கு சென்றார். அங்கு கடம்பன்மூடு சந்திப்பில் ரப்பர் கழக பெண் தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் உள்பட ஏராளமானோர் அவருக்கு வரவேற்பு அளித்து கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இயற்கை வளம் அழிக்கப்படுகிறது

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை வளம் அழிக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையால் தான் குமரி மாவட்டம் செழிப்பாக உள்ளது. அந்த மலையை தகர்த்து கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் குமரி மாவட்டம் இன்னும் சில வருடங்களில் பாலைவனமாக மாறி விடும். இதற்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கூட அரசு கண்டு கொள்ளவில்லை.

அரிக்கொம்பன் யானை தற்போது குமரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் ரப்பர் கழக தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது. அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் தங்களுக்கு 40 ரூபாய் ஊதிய உயர்வுக்கு வருடக்கணக்கில் போராட வேண்டியிருக்கிறது. 5700 ஹெக்டர் பரப்பளவில் இருந்த அரசு ரப்பர் தோட்டத்தை தற்போது பாதிக்கும் கீழாக குறைத்துள்ளனர்.

டாஸ்மாக் மூலம் வருவாயை பெருக்க...

ரப்பர், தேயிலை தோட்டங்கள் மூலம் கிடைத்த வருவாயை குறைத்து டாஸ்மாக் கடை மூலம் வருவாயை பெருக்க அரசு திட்டமிடுகிறது. மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு கூட போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது. இதனால் மக்களின் மனநிலை கொதிநிலையில் உள்ளது.

அதே வேளையில் மக்களின் நலன் குறித்து கவலைப்படாதவர்களுக்கே மக்கள் வாக்குகளை கொடுத்து வருகின்றனர். மக்கள் கூறும் பிரச்சினைகளை எங்களால் கேட்க தான் முடியும். தீர்வு ஏற்படுத்தும் இடத்தில் தற்போது நாங்கள் இல்லை. ஆனால் நிலைமை ஒரு நாள் மாறும். மக்கள் உண்மையை புரியும் நாள் மிக விரைவில் வரும்.

பங்கு கேட்டு நடத்தும் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சம்பாதிப்பவர்களும், ஊழல் செய்து பணம் சம்பாதிப்பவர்களும் தண்டனை பெற வேண்டும். ஆனால் தற்போது பா.ஜனதா அரசு மேற்கொள்வது தங்களுக்கு பங்கு கேட்டு நடத்தும் சோதனை தான். தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான்.

ஆனால் ஊழல் செய்பவர்களை விமர்சிக்கும் தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை. நமது பக்கத்து கர்நாடகாவைக் கூட உதாரணமாக கூறலாம். ஆவின் நிர்வாகத்தில் குழந்தை தொழிலாளர் விஷயத்தில் அமைச்சர் தவறை திருத்துவதை விட்டு, தவறை மறைக்க முயற்சிக்கிறார். அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் காலம் விரைவில் வரும். மக்களின் புரட்சியால் அது சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்